நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை!!!!

>> வியாழன், 19 ஜூலை, 2012


நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை!!!!
1965ன் பிற்பகுதியில் தமிழகத்தில் ஒரெழுத்தாளர் பிரஷ்டம் செய்யப்பட்டார். அவரது சொந்த கிராமான தேவங்குடிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. செய்த குற்றம் ஒரு நாவல் எழுதியது.! அவ்வளவே!!. அவர் தி.ஜானகிராமன்!! படைப்பு  “அம்மா வந்தாள்”. வெளிவந்தபோதே மிகுந்த விமர்சனத்திற்க்கும் பரபரப்புக்கும் வித்திட்டது.

தமிழில் உருவான செவ்வியில் படைப்பு என்பதற்கான அத்தனை அத்தாட்சிகளும் உள்ள படைப்பு.1966 லில் வாசகர் வட்ட வெளியீடாக.
ஒரு நாவலாகவே கச்சிதமான வடிவத்தில் எழுதப்பட்ட படைப்பு. முன்று பெரிய அத்தியாயங்கள்.அதற்குள் சிறு பகுப்புகள்.

தாய் என்னும் நிலையில் போற்றப்படும் அலங்காரம் என்னும் பெண், ஞான சூரியனாக இருக்கும் கணவனை விடுத்து இன்னொரு ஆணுடன் “பிறழ் உறவு கொள்கிறாள். அதற்க்கு விமோசனமாக தன் மகனை வேதம் படிக்க அனுப்புகிறாள். இறுதியில் காசிக்கு பயணமாகிறாள் என்பதே நாவலின் சுருக்கம்.

வெளிவந்து சுமார் 50 ஆண்டுகள் கடந்தும் இன்றும் வாசகர்கள் மத்தியில் பேசப்படும் படைப்பாக இருக்கிறது. புதியதாக வாசிக்கபடும் வாசகர் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாவது -நிதர்சனம்.கடல்போல ஆழ்ந்தும் கானகம்போல அடர்ந்த வழிகளைக் காண்பித்தும் மனதில் நிரந்திர இருப்பை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. 

தன் ஆளுகைக்கு பெண்னை உட்படுத்த விழையும் ஆண்நிலையும் அதற்க்கு எதிரான பெண்ணின் மனத் திருப்பங்களையும் வெளிப்படுத்தும் படைப்பு .அலங்காரத்தை உந்துவது காமம் மட்டும் அல்ல. தன் உடல்மீதான உரிமையைத் தானே நிர்ணயிக்கும் உரிமை. அதை அவளே எடுத்துக்கொள்கிறாள். இது நவீன கால பெண்களுக்கும் பொருந்தும்.

ஒரே வாரத்தில் நடந்த இரு சமபவங்கள் தமிழகத்தை திரும்பி பார்க்கவைத்தது. சமுக தளங்களில் பேசும் பொருளாய் தீவிரமாய் விவாதிக்கப்பட்ட்து. முதல் சமபவம் கணவனை இழந்த கைம்பெண் மற்றொரு ஆண் துணையை நாடியதை கண்டித்து வயதான மாமனார் அப்பொண்ணை வெட்டி கொலை செய்து விட்டு எரித்தது. மற்றொன்று தன் மனைவி மற்றொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்ததை அறிந்த ஓய்வு பெற்ற ராணுவ வீர்ர் கொலை செய்தது.பதிவானது சில சமபவங்களே வெளிவராத சமபவங்கள் ஏராளம். விலக்கப்பட்டவர்களின் சார்பில் பேசும் குரல்கள் வலுவாக ஒலிக்கும் இக்காலத்தில் இச்சம்பவங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் அதிர்வலைகள் அதிகம்..

ஆண் வேட்டையாடினான்,பெண் சேகரித்தாள்.ஆண் பாதுகாத்தான்.பெண் பராமரித்தாள்.இதனால மூளையும் உடலும் எதிர் எதிர் திசையில் பரிணாமம் அடைந்தார்கள்..ஆணும் பெண்ணும் வேறு வேறு !.உயர்வோ தாழ்வோ இல்லை.ஒற்றுமை ஒரே இனம் என்பதுதான்!!பல்வேறு மதிப்பீடுகள், வேவ்வேறு விதிகளின் அடிப்படையில் அவர்கள் பல்வேறு உலகங்களில் வாழ்கிறார்கள்.எல்லோருக்குமே இது தெரியும் என்றாலும் வெகு சிலரே ஒத்துக்கொள்கின்றனர்.

இந்தியாவில் மட்டும் வருடத்திற்க்கு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் பதிவாகின்றன. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மறுமணங்கள்.
பல தீவிர உறவுகள் நீண்ட கால உறவாக மாறாமல் குறுகியகால உறவாக முடிந்துவிடுகின்றன.இப்போது பல திருமணங்கள் கொலையில் முடிவடைகின்றன.ஆபத்து! அதிர்ச்சி!! .சோகம்!!!.

முதல் சம்பவத்தில் கைம்பெண் மாற்றுத்துணையை தேர்ந்தெடுப்பது குடும்பத்தின் கவுரத்திற்கு இழுக்கு என்ற நோக்கத்தில் வயதான முதியவரால் எடுக்கப்பட்ட முடிவு..
கற்பு என்கிற ஆயுதச் சொல்லின் மூலம் பெண்னை அடிமைபடுத்திய ஆணின் அடுத்த கண்டுபிடிப்பு இந்த கொளரவ கொலைகள்.உயிர் வாழ்வது கடினம்.ஆனால் உறவு எளிதானதல்ல.!

கடந்த நூற்றாண்டில் பெண்களுக்கு இருந்த தடைகளில் சில இந்த நூற்றாண்டில் விலகிவிட்டன.பெண்களின் நடை உடை பாவனைகள்,பொது இடங்களில் சுதந்திரமாக புழங்குதல் முதாலான புற அம்சங்களில் மாற்றங்கள் உண்டாகியுள்ளன.ஆனால் கலாச்சார ரீதியாக ஆழ்மனங்களில் கட்டப்பட்டுள்ள கருத்தியல் கூறுகள் அகற்றப்படவில்லை. இன்னமும் ஆழ்மனங்களை விட்டகலாத பாரங்களாக ,நம்பிகைகளாக அழுத்திக்கொண்டிருப்பதால் அறிவாற்றலின் பெரும்பகுதி தேங்கிய குட்டை போல இருக்கிறது.பாரங்களை குப்பையில் போட்டுவிட்டால் வேறு எப்படி வாழ்வது என்கிற மலைப்பு ஓங்கி நிற்கிறது.எத்தனையோ வழக்கங்கள் காலாவதியாகிக் கொண்டிருப்பதைப்போலச் சமத்துவத்திற்க்கு எதிரான நம்பிக்கைகளோ, கருத்துகளோ, தத்துவங்களோ ,வழக்கங்களோ, பார்வைகளோ.நோக்கங்களோ இங்கே காலவதியாவதில்லை!!

பெண்களின் நலன்களை காக்க கடந்த ஜம்பது ஆண்டுகளில் கடுமையான சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.ஆடவர்க்கே உரிய துறைகளில் பெண்களும் பணிபுரிய வாய்ப்புத்தரப்பட்டுள்ளது.பெண்கல்வி வளர்ந்துள்ளது.இதனால மரபாகப் பெண்களிடம் காணப்படும் சில கூச்சங்களும் ,விலக்குகளும் ஓரளவு நீங்கியுள்ளன.அடுப்பே வனவாசம் கடுப்பே கைலாசம் என்பது பழங்கதையானது.

சமுகத்தில் பெண்,பால் என்ற அடிப்படையில் அல்லாமல் தகுதி ,திறன் என்ற அடிப்படையில் ,ஒரு தனிமனிதர் என்ற அளவில் பங்கு பெறுகிறாள்.இது வரலாற்றில் நிகழ்ந்துள்ள மிக அடிப்படையான புறவகை மாற்றமாகும். இம்மாற்றங்கள் பெண்ணின் வாழ்க்கையில் அகவயமான மாற்றங்களை படிப்படியாக ஏற்படுத்துகின்றன. 

வீட்டுப்பணி என்பது பழையகால எச்சமாகவும்,பணி இடங்களில் மேற்கொள்ளுகிற பணி புதுக்கால வருகையாகவும் இரட்டிப்பாக ஆகியுள்ளது. ஒரே பணியில் ஈடுபடும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரேவிதமான புதியதாக்கங்கள் ஏற்படுவது இயல்பே.பழைய கால புனைவுகள் எல்லாம் இன்று ஆணைப்போல பணியில் ஈடுபடுகிற பெண்ணிடம் மட்டும் மாறாமல் நீடிக்கும் என எதிர்பார்ப்பது வரலாற்றை புரியமுடியாத அல்லது புரியமறுக்கிற பார்வையாகவே இருக்கமுடியும்.

பெண், ஆடவனின் நுகர்ச்சிக்கேற்ற காமப்பொருளாகவோ அல்லது சேவைப்பொருளாகவோ ,அல்லது தெய்வீகப் பொருளாகவோ இல்லாமல் சமுகத்தில் தன்னை ஒரு உயிரினமாக உணர்ந்து வெளிப்படுத்துகிறபோது இந்த மாற்றம் ஆணுக்கு கலவரத்தை ஏற்படுத்துகிறது.

பெண் சுதந்திரம் என்பது ஆண் ஆதிக்கத்தை பெண் மறுப்பதாகவே ஆடவணுக்குத் தோன்றுகிறது.அது பாலியல் சுதந்திரம் என்ற தவறான பார்வையும் ஏற்படுத்துகிறது.இவையே இரண்டாவது சம்பவத்தில் எதிரொலித்திருக்கிறது.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்  தினசரிகளில் ராசிபலன் வருமோ இல்லயோ ஸ்டவ் வெடித்ததுவரும் .ஆனால் சமீபாகாலங்களில் பாலியல் கொலைகளே இடம்பெறுகின்றன.இச்சம்பவங்களில் அதிகம் பாதிக்கப்படுவது எதிர்கால சந்தினர் தான். பெற்றோர் இல்லாத காரணத்தால் குழ்ந்தைகளின் கல்வி மற்றும் பாதுகாப்பு மிகுந்த அவலத்திற்கு உள்ளாகிறது.இவர்கள் தான் பெரும்பாலும் சமூகத்தில் எளிதாக தவறான பாதையில் பயணப்படுகிறார்கள். கருத்துவேற்றுமை இல்லாத குடும்பம் உலகத்திலே இல்லை. மனம் திறந்து பேசுங்கள். முடியாதபோது கொலை செய்வதைவிட பிரிவதே மேல் என்கிறார்கள் உளவியாளார்கள்.மீதி இருக்கும் நாட்களை அர்த்தமுடன் வாழ!!

பெண் இன்று வரலாற்றில் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்குத் தன்னிலை பெற்றவளாக உருவாகிக்கொண்டிருக்கிறாள்.இதுவரை ஒரு பொருளாக வாழ்ந்தவந்த பெண் ஒரு தன்னிலையாக மாறும்போது சுயமரியாதைமிக்க மானுடம் கொண்டவளாகிறாள்.ஒர் ஆடவனுக்கு அவனுடைய மரியாதை தாக்குறும்போது வெளிப்படுகின்ற எதிர்புணர்வைத் தன்மானம் என்று போற்றுகின்ற அதே சமுதாயம் பெண்ணிடமும் அதே அள்வுகோலைப் பயன்படுத்த வேண்டும்.

திருமணம் என்ற சமுக நிருவனத்தை ஆணும் பெண்ணும் பார்க்கின்ற விதம் வெறுபட்டதாக இருக்கின்றது.ஆணுக்கு தன் சந்ததியை விருத்தி செய்யும் அமைப்பாகவும் பெண்ணுக்கு பாதுகாப்பு தரும் புகலிடமாகவும் இருக்கிறது.இருபாலர்க்கும் இருவித தேவைகளுக்காக அவசியமாகிறது.அதில் அன்பு காதல் ஆகியவை அடிப்படையாக இல்லை.இதுமாறும்போது அதிலிருந்து அவர்கள் வெளியேற முயல்வது இயல்பே.
சமத்துவமும் ,சுதந்திர உணர்வும்,மனிதராக வாழ்வதற்குரிய நேயமும்,நாகரிக வாழ்வுக்குரிய பகுத்தறிவுப்பார்வையும்,நமக்காக காத்திருக்கின்றன.இந்த பிரபஞ்சத்தில் தோன்றி மறைவதற்கு நமக்கு கிடைத்துள்ள ஒரேயொரு வாய்ப்பை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டாமா?

எதிர்பார்த்தலும் காத்திருந்தலுமாய் வாழ்க்கை நகர்கிறது வர்ணம் பூசம் என எதிர்பார்த்த பொழுதுகள் கரியை பூசி விடுகின்றன.கரி பூசப்பட்ட பொழுதுகள் கசந்த பொழுதுகள் ஆகின்றன்.ஏமாற்றம் கசப்பின் ஊற்றாக இருக்கின்றது.

கம்பளி மூட்டைன்னு நெனச்சி கரடி மூட்டைய அவுத்தானாம் ....சொலவடைத் தான் ஞாபகம் வருகிறது.

2 பின்னூட்டங்கள்:

உங்களோடு... 19 ஜூலை, 2012 அன்று AM 11:03  

//பெண், ஆடவனின் நுகர்ச்சிக்கேற்ற காமப்பொருளாகவோ அல்லது சேவைப்பொருளாகவோ ,அல்லது தெய்வீகப் பொருளாகவோ இல்லாமல் சமுகத்தில் தன்னை ஒரு உயிரினமாக உணர்ந்து வெளிப்படுத்துகிறபோது இந்த மாற்றம் ஆணுக்கு கலவரத்தை ஏற்படுத்துகிறது.//நிதர்சனமான உண்மை,

Unknown 19 ஜூலை, 2012 அன்று PM 4:34  

மிக்க நன்றி. பாவம் அவங்க...பொழைச்சு போகட்டும்..உங்க புண்ணியத்தால்!!

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP