ஒரு கோப்பின் கதை!!

>> வியாழன், 19 ஜூலை, 2012


ஒரு கோப்பின் கதை!!

19 ம் நூற்றாண்டில் அமெரிக்க ஜக்கிய நாடுகளுக்கும் மெக்சிகோக்கும் இடையே ரியோ கிராண்டி(Rio Grante) ஆறு தொடர்பாகச் சிக்கல் ஏற்பட்டது. இச்சிக்கலை தீர்க்க 1895 ஆம் ஆண்டு கருத்தரங்கில் அமெரிக்க ஜக்கிய நாடுகளின் தலைமை வழக்காடுநர் (Attorny General) ஹார்மன் என்பவர் ஆற்றுநீர்ப் பகிர்வில் ,ஆட்சி எல்லை இறையாண்மை (territorial Soverignty) என்ற கோட்பாட்டை முன் வைத்தார்.ஒரு நாடு தனது எல்லையில் ஒடும் ஆற்றை அதன் விருப்பத்திற்கேற்ப எப்படி வேண்டுமானாலும் பயனபடுத்தும் இறையாண்மை பெற்றிருக்கிறது என்ற கருத்தை முன்வைத்தார்.பாசனம் பெறும் மற்ற நாடுகளைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்றும் கூறினார்.ரியோ கிராண்டி ஆறு அமெரிக்க ஜக்கிய நாடுகளில் உற்பத்தியாகி ,மெக்சிகோ வழியாகப் பாயவதால் இந்த கோட்பாட்டை அமெரிக்கர்கள் வைத்தார்கள்.

ஆனால் கொலம்பியா ஆறு தொடர்பாக அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் சிக்கல் ஏற்பட்டபோது அமெரிக்க ஹார்மென் கோட்பாட்டை முன் வைக்கவில்லை.காரணம் கொலம்பிய ஆறு கனடாவில் உற்பத்தியாகி அமெரிக்கவுக்கு வருகிறது.இந்த கோட்பாட்டை முற்றிலும் மறுத்துவிட்டன உலக நாடுகள் அனைத்தும்.ஆனால் இதை தூக்கிவைத்துக்கொண்டு தான் பயன்படுத்தியது போக மிச்சமிருந்தால் “வருண பகவான்கருணை வைத்தால் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தருகிறோம் என்கிறது கர்நாடகம்.
ஆறுகள் நாகரீகங்களின்,தேசத்தின் அடையாளங்கள்.எகிப்து என்றால் நைல் நதி!சீனா என்றால் மஞ்சள் நதி!,லண்டன் என்றால் தேம்ஸ்!ரஸியா என்றால் வால்காவும் இந்தியா என்றால் கங்கையும் நம் எண்ண அலைகளில் மோதும்.தமிழகம் என்றால் காவிரி மனதில் ஓடும். கர்நாடகத்தின் அடையாளமாக வரலாற்றில் இடம்பெறவில்லை காவேரி!!

மேற்குத் தொடர்ச்சி மலைகள் தமிழ்நாட்டை மழை மறைவு மண்டலமாகவும் ,கர்நாடக மற்றும் கேரளாவை மழை நிறைவு மண்டலமாகவும் அமைத்துள்ளது.தென்மேற்குப் பருவகாற்று மேகங்களைச் சுமந்து வந்து, மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் மேற்குச் சரிவுகளில் சேர்க்கிறது. அங்குள்ள காடுகள் மேக்க்  கூட்டங்கள் குளிர்வுற்று மழையை பொழிகின்றன. வடகிழக்கு பருவக்காற்றின் வழியாகத்தான் தமிழ்நாட்டிற்கு மழை கிடைக்க வேண்டும்.ஆனால் போதிய மழை இல்லை.. வேகமாகவும் இக்காற்று வீசுவதில்லை .இக்காற்றை தடுத்துப்பொழிய வைக்கும் அளவிற்குத் தமிழ்நாட்டின் கிழக்கு மற்றும் நடுப்பகுதிகளில் மலைத் தொடர்களும் இல்லை.இத்தகைய இயற்கையமைப்பினால் கர்நாடகத்திற்கு மிகுதியான மழையும் ,தமிழகத்திற்குக் குறைவான மழையும்!

காவிரி உற்பத்தியாகும் தலைகாவிரியில் ஒர் ஆண்டிற்கு 600செ.மீ முதல் 800செ.மீ மழை பொழிகிறது.பாகமண்டலாவில் 600செ.மீ மெக்காராவில் 326.5செ.மீ ,குடகு மாவட்டத்தில் சராசரியாக 272.5செ.மீ ,கிருஷ்ணராஜ சாகரில் 81செ.மீ என மழை பொழிகிறது .தமிழ்நாட்டில் ,மேட்டூர் நீர்த்தேக்கத்தில் 76.2செ.மீ ,மேலணையில் 96.9செ.மீ,கல்லணையில் 85.9செ.மீ,தஞ்சாவூரில் 97செ.மீ என்று குறைவாக மழை பொழிகிறது.

இயற்கை அதற்காக மாற்று வழியை அமைத்துள்ளது.மலைகள் நிறைந்த கர்நாடகம் மேட்டுப்பகுதியாகவும் ,தமிழகம் பள்ளப்பகுதியாகவும் சம்வெளியாகவும் அமைந்துள்ளது.இயற்கை செய்யும் சமன்பாடு!!

1866 இல் மைசூருக்கான பிரித்தானிய நிர்வாகத்தைச் சேர்ந்த கர்னல் ஆர்.ஜே.சாங்கி மலைச்சரிவில் விழும் மழைநீரை முழுமையாக பயன்படுத்தும் நோக்கத்தோடு ,குளங்கள்,ஏரிகளை ஆழப்படுத்த ,விரிவுப்படுத்த ஆற்றுப் பாசனத்தை அதிகப்படுத்த பெருந்திட்டம் ஒன்றைத் தயாரித்தார்.வறட்சியும் பஞ்சமும் இல்லாமல் செய்வதே இத்திட்ட்த்தின் நோக்கம்.1872லில் பிரித்தானிய இந்திய அரசு ஏற்றுக்கொண்ட்து.லணடனும் ஏற்றுக்கொண்ட்து. இதற்காக புதியதாக பாசனத்துறை உருவாக்கப்பட்ட்து.ஆனால் 1877-78 இல் கடும்பஞ்சம் வந்த்தால் இத்திட்ட்த்தை நிறைவெற்ற முடியவில்லை.
மைசூர் நிர்வாகப் பொறுப்பு மீண்டும் மகாராஜாவிடம் 1881 இல் 
ஒப்படைக்கப்பட்டது. ஆனால் முக்கிய அதிகாரிகள் வெளைக்கார்ர்களே. சாங்கியின் பாசனத் திட்டங்கள் முழுவீச்சில் தொடங்கப்பட்ட்து.இந்த மாற்றங்கள் சென்னை அரசுக்கு காவிரி நீர் வரத்து குறையுமே என்ற கவலையை உணடாக்கியது.ஏற்கெனவே இதுகுறித்து 1870 வாக்கில் மைசூர் அரசுக்கு கடிதம் எழுதியிருந்த்து சென்னை.அதனை தொடர்ந்தும் பல கடிதப் போக்குவரத்துகள்.

1890 –லில் உதகமணடலத்தில் சென்னை அதிகாரிகளுக்கும் மைசூர் அதிகாரிகளுக்கும் காவிரி நீர் குறித்து கூட்டம் நடந்த்து.மைசூர் தரப்பில் பிரித்தானிய ஆட்சிப் பேராளர் ஆலிவர் செயிண்ட் ஜான்,திவான் கே.சேஷாத்திரி அய்யர் மற்றும் வெள்ளைக்காரத் தலைமைப் பொறியாளர் கர்னல்.சி.பவென் ஆகியோர் கலந்து கொண்டனர்.சென்னைத் தரப்பில் ஆளநர் அவை உறுப்பினர் எச்.சி.ஸ்டோக்ஸ் மற்றும் தலைமை பாசனப் பொறியாளர் ஜி.டி.வால்ச் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மைசூர் அரசு தனது தேவைகளுக்கேற்ப நீர்ப்பாசனத் திட்டங்களை செயலபடுத்த அதற்கு நியாமான சுதந்திரங்களை வழங்குவது மற்றும் சென்னை அரசாங்க நலன்களுக்கு ஊனம் ஏற்பட்டு விடாமல் பாதுகாப்பது என்ற இவ்விரு நோக்கத்திற்க்காகத்தான் கூட்டம் நடந்த்து.மாற்றி மாற்றி முன்மொழிவுகள் வைக்கப்பட்டன..

1891லில் மே மாதம் நடந்த இரண்டாவது கூட்டத்திற்க்கு பின் விதிமுறைகள் அடங்கிய ஒரு தொகுப்பினை மைசூர் முன் மொழிந்தது.சில திருத்தங்களும் விளக்கங்களும் பெற்ற பின் 1892 பிப்ரவரியில் சென்னை அவ்விதிகளை ஏற்றுக்கொண்ட்து. அவ்விதிகள்தான்  “மைசூர் அரசின் பாசனப் பணிகள் –சென்னை-மைசூர் ஒப்பந்தம்-1892 “ என்று பெயர் பெற்றன.

காலப்போக்கில் இரு தரப்புக்கும் இவ்வொப்பந்தம் குறித்து அதிருப்தி ஏற்பட்டது.குறிப்பாக பாசனதிட்டங்கள் நிறைவேற்றுவதில். கண்னம்பாடி அணை மற்றும் மேட்டுர் அணை கட்டுவது தொடர்பாக உடனபாடு ஏற்படாத்தால் இந்திய அரசு பிரச்சனையை தீர்ப்பாளர் முடிவுக்கு விட்ட்து.

1913 சூன் மாதம் அலகாபாத் உய்ர்நீதிமன்ற நீதிபதி எச்.டி.கிரிஃபின் அவர்களைத் தீர்ப்பாளராக நியமித்த்து.அவருக்கு உதவியாக இந்திய அரசின் பாசன தலைமை ஆயவாளர் எம்.நெதர் ஹோல் என்பவரை நியமித்தது.

1914 ஆம் ஆண்டு கிரிஃபின் ஆணை வாங்கினார்..இரு அரசுகளும் அணைகளை கட்டிக்கொள்ளலாம் என்றும் மேலணையில் ஆறரை அடி உயரத்தில் ஒரு நொடிக்கு 22,750 கன அடி தண்ணீர் ஓடும்படியும் காவிரியில் மைசூர் தண்ணீர் விடவேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

சென்னை அரசு இதனை ஏற்கவில்லை. மேலணையில் 7 அடி உய்ரமும் ஒரு நொடிக்கு 26,750 கன அடியும் தண்ணீர் வந்தால்தான் பழைய பாசனப் பகுதியை பாதுகாக்க முடியும் :அனுபவ பாத்தியதை உரிமைப்படி உள்ள அளவு தண்ணீரும் கிடைக்கும் என்று சென்னை அரசு கூறி மேல் முறையீடு செய்த்து..இந்திய அரசு மேல்முறையீட்டை ஏற்றுக்கொள்ளவில்லை.சென்னை லண்டனுக்கு மேலமுறையீடு செய்தது.

வல்லுநர்களைக் கலந்து ஆயவு செய்தபின் சென்னையின் மேல்முறையீட்டில் நியாயம் இருப்பதாக 1919 இல் லண்டன் அறிவித்தது.1920 லில் இருஅரசுக்கும் மீண்டும் பேச்சுவார்த்தை .1921-1924 வரை பல கட்டப் பேச்சுவார்த்தை நடந்தது.ஒரு கட்ட்த்தில் சென்னை ஆளுநர் வெலிங்கடன்பிரபு ,மைசூர் மகாராஜாவுடன் சாதரண முறையில் காவிரிப்பிரச்சனை குறித்து பேசினார்.இதற்கிடையே புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சு ஆளுநர் காரைக்கால் பாசன நலன்களை சென்னை அரசாங்கம் காப்பற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இறுதியில் 1924 பிப்ரவரி 18 ஆம் நாள்,33 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் 1892 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது.இதுதான் 1924 ஆம் ஆண்டு காவேரி ஒப்பந்தம்.சென்னை பொதுப்பணித்துறைச் செயலர் சார்பாக பி.ஹாக்கின்ஸ்ம் மைசூர் சார்பில் திவான் ஏ.ஆர் .பானர்ஜியும் கையொப்பமிட்டனர்.

வெள்ளையர் ஆடசி காலத்தில் இவ்வளவு படிக்கட்டுகள் ஏறி இறங்கி ,இருதரப்பும் சமத்துவ நிலையில் எத்தனையோ முறைகள் திரும்ப திரும்ப பேச்சு வார்த்தைகள் நட்த்தி ஏற்படுத்திக் கொண்ட்துதான் 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தம்.

மன்னராட்சியோ,சர்வாதிகார ஆட்சியோ மக்களாட்சியில் ஏதோ ஒருகட்சியின் ஆட்சியோ ,போட்ட ஒப்பந்த்தைப் பின்னர் வரும் ஆட்சிகள் மதித்து நடக்க வேண்டும் என்பது உலக நியதி. வேண்டுமானால் அந்த ஒப்பந்தங்களுக்குத் திருத்தங்கள் கோரலாம்.அவ்வாறு திருத்தங்கள் தேவைப்பட்டால் என்ன செயவது என்று ஒப்பந்த்தில் விதி 10-இல் உள்ள கடைசி உட்பிரிவான XV கூறுகிறது.ஒன்று சிக்கலைத் தீர்ப்பாயத்திற்கு விடலாம் அல்லது இருதரப்பும் ஒத்துக்கொண்டால் ,இந்திய அரசின் முடிவுக்கு விடலாம் என்று அவ்விதி கூறுகிறது.ஆனால் கர்நாடகம் தானாக்வே 1924 ஒப்பந்தம் காலவதி ஆகிவிட்ட்து கூறி தமிழகத்திற்க்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என்கிறது.

தீர்ப்பாயம்,காவிரி ஆணையம்,உச்சநீதிமன்றம் போன்ற எந்த உயர் அமைப்பின் வழிக்காட்டலையும் கேடகமாட்டோம் .மாண்டியா,மைசூர் விவசாயிகளின் வெறிக்கூச்சல்தான் எங்கள் அரசை வழிநட்த்தும் என்று செயல்படுகிறது கர்நாடகம்.

அநீதியாக கொலை செய்யப்பட்ட பிறகு ,மதுரை வீதிகளில் கண்ணகி தலைவிரிகோலத்தோடு கேட்டாளே ,அதே வார்த்தைகளில் தான்,அவள் வழி வந்தோர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் கேடக வேண்டியிருக்கிறது.

சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்                  
ஈன்ற குலவி எடுத்து வளர்க்குறூஉம்                           
சான்றோரும் உண்டுகொல்,சான்றோரும் உண்டுகொல்?





0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP