சுற்றுச்சூழலும் சட்டமும்-நேர்காணல்,தியோடர் பாஸ்கர்

>> வெள்ளி, 20 ஜூலை, 2012


சுற்றுச்சூழியல் சாந்த சொல்லாடல்களை தமிழில் முன்னெடுத்து சென்றவர் தியோடர் பாஸ்கர். இன்னும் பிறக்காத தலைமுறைக்காக ,தாமரை பூத்த தடாகம் போன்ற பல் சிறப்பு படைப்புகளை தமிழில் வழங்கியர்.கனடா தமிழ் இலக்கிய தோட்டம் விருது உடபட பல விருதுகளை பெற்றவர். அவரின் நேர்காணல்....

நேர்காணல் -  தியடோர் பாஸ்கரன், அறங்காவலர். WWF.India.    27.5.10


சுற்றுச்சூழல் பிரச்சனைகளிலில் பெரும்பாலும் பாதிக்கப் படுவது ஏழை மக்களும்,நடுத்தரமக்களும் .ஏன்?விரிவாக சொல்லுங்கள்.


           இந்தக் கேள்விக்கு பதிலை சுருக்கமாகவே சொல்லலாம். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்போது வாழ்வாதாரங்கள் 
சிதைகின்றன. நதி, நீர் நிலைகள் வரண்டு குடிநீர் தட்டுப்பாடு உருவாகின்றது. ஏழை மக்கள் பல கிலோ மீட்டர் 
சென்று நீர் கொண்டுவர வேண்டியிருக்கின்றது. சுற்றுச்சூழல் சீரழிவின் முக்கிய குறியீடுகள் குடிதண்ணீர் பஞ்சம், குடிநீர் மாசுபட்டிருப்பது. அதே போல் எரிபொருள். எதை வைத்து சமைப்பது. மாசு சார்ந்த
நோய்கள் முதலில் தாக்குவது அவர்களைத்தான். மருத்துவ கவனிப்புக்கு அவர்களிடம் போதிய பணம் இல்லை.
காட்டில் வாழும் ஆதிவாசிகள் பல காரணங்களுக்காக ...அணை, கனிமசுரங்கங்கள்...என காட்டிலிருந்து வெளியேற்றப்படுகின்றார்கள். கடந்த சில பதிற்றாண்டுகளாக தமிழ்நாட்டு மலைத்தொடர்களை நான் கவனித்து வருகின்றேன். காடுகள் சூழ்ந்திருந்த பள்ளத்தாக்குகள் சீரழிக்கபட்டுவிட்டன. மலைச்சரிவுகளை போர்த்தியிருந்த மழைக்காடுகள் சரைக்கப்பட்டு அவ்விடத்தில் தேயிலைத் தோட்டங்கள் உருவாகியிருக்கின்றன. பல காட்டுப்பகுதிகள் இன்று பொட்டல் வெளியாகி விட்டன. அருவிகள் வரண்டு, பாறைகளில் நீர் வழிந்தோடிய தடம் மட்டும் தெரிகின்றது. வனவளம் செழித்திருந்த காலத்தில் தாவர உண்ணிகளாக காட்டெருது, மான், பன்றி, இவற்றை அடித்து இரையாகக் கொண்ட புலி, சிறுத்தை, செந்நாய், போன்ற இரைகொல்லிகள் இவை நிறைந்திருந்த இக்காடுகளில் இன்று உயிரினங்களின் தடயங்களை காண்பது கூட அரிதாகி விட்டது. காடுகளை அழித்தது, நமது மாடியிலுள்ள தண்ணீர் டாங்கிகளை உடைப்பதற்கு ஒப்பாகும். அதைத்தான் நாம் செய்து விட்டோம். நதிகள் வரண்டு போயின. இயற்கையின் எல்லா வளங்களையும் நாம் ஊதாரித்தனமாக செலவு செய்கின்றோம். மணற்கொள்ளை ஒரு எடுத்துக்காட்டு. நதிப்படுகைகளிலிருக்கும் நீரை அழிக்கும் செயல்.  இவை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டால் சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கும் வறுமைக்கும் உள்ள தொடர்பு, நம் வாழ்வின் அன்றாட வளத்திற்கும் பல்லுயிரினத்திற்கும் உள்ள பிணைப்பு ஆகியவற்றை சாமனிய மக்களும் அறிந்து செயல் பட முடியும். சுற்றுச்சூழல் பற்றிய கரிசனமும் சமூகநீதி பற்றிய அக்கறையும் பிண்ணிப்பிணைந்துள்ளன என்பதை நாம் உணர முடியும். நதிகள் வரண்டு போனது ஏன்? நிலத்தடி நீர் அதளபாதாளத்திற்கு போனது ஏன்? இயற்கையில் ஒன்னொன்றுக்கும் உள்ள இணப்பு என்ன? இதை நாம் இங்கு இன்னும் உணரவில்லை. பாரதி சொன்னது போல் 'கஞ்சி குடிப்பதற்கிலார்..அதன் காரணங்கள் இவையெனும் அறிவுமிலார்" 


 சுற்றுச்சூழல் காக்க நம்மிடம் சட்டங்கள் உள்ளதா?ஆம் எனில் எத்தகைய சட்டங்கள்?அவை நடைமுறையில் பயன் அளிக்கிறதா?


        இந்தத் தளத்தில் சட்டங்கள் என்றவுடன் என் நினைவிற்கு வருபவை Indian Forest Act, Wildlife Protection Act, Forest Conservation Act, Water Pollution Act, Air Pollution Act, Environmental Protection Act, Biodiversity Act.  இவைகளில்  முதல் மூன்றும் ஏறக்குறைய திருப்திகரமாக நடைமுறைப்படுத்தப்ப்டுகின்றன. எனினும் காடுகளுக்கு வெளியே வாழும் காட்டுயிருக்கு பாதுகாப்பு இல்லை. எடுத்துக்காட்டாக உடும்பு,  தேவாங்கு போன்ற சிற்றுயிர்கள் இன்றும் அழிக்கப்படுகின்றன. நீர், காற்று மாசுபடுவதைப்பற்றிய சட்டத்தை அமுல் செய்வதில் பெரும் எதிர்ப்பு தொழிற்சக்ரவர்திகளிடம் இருந்து வருகின்றது. அதுவும் வேறு வேறு ரூபத்தில் வரும். நதிகளையும், நிலத்தடி நீரையும் சீரழிக்கும் தொழிலதிபர்கள் சட்ட்த்தின் பிடியிலிருந்து எளிதாக தப்பி விடுகின்றார்கள். பல்லுயிரிய சட்டம் அண்மையில் தான் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.அதன் தாக்கம் தெரிய சில ஆண்டுகளாகும்.  சட்டங்கள் பல இருந்தாலும் மேம்பாடு (development) என்ற பெயரில் சுற்றுச்சூழல் சிதைக்கப்படுகின்றது. உடனே கையில் கிடைக்கும் காசைப்பற்றித்தான் மனிதனுக்கு அக்கறை. நம் நாட்டில் சட்டங்களுக்குப் பஞ்சமில்லை. கடலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் கட்டடம் ஏதும் கட்டக்கூடாது என்று ஒரு சட்டம் உள்ளது. என்ன நடக்கின்றது என்று நீங்களே சென்னையில் நீலாங்கரை போன்ற இடங்களில் பார்க்கலாம்.


சுற்றுச்சூழல் குறித்த போதுமான விழிப்புனர்வு நம் மக்களிடையே ஏற்படதற்க்கு என்ன காரணம்? அவைகளை கலைய என்ன வழிகள்?


        சுற்றுச்சூழல் அக்கறை பெருவாரியாக ஆங்கிலம் கற்ற மக்களிடையே தான் உருவாகியிருக்கின்றது. தமிழில் அடிப்படையான நூல்கள் கூட இல்லை. தமிழ் மொழி சுற்றுச்சூழல் இயக்கத்திற்காக, இந்த புதிய அக்கறைக்காக தயார்படுத்தப்படவில்லை. சுற்றுச்சூழல் கல்வி என்பது மாணவர்களுக்கு மட்டுமல்ல...பொதுமக்களுக்கும் தேவையானது. காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், கதிரியக்க மாசுபாடு, ஒலி மாசுபாடு போன்ற விவரங்களைப்பற்றி அரிச்சுவடு தகவல் கூட நமது அச்சு ஊடகங்களில் காண்பதற்கில்லை.  பள்ளிகளில் சூழியல் போதிக்கப்படுவதில்லை. ஏதோ பேருக்கு சொல்லிக் கொடுக்கின்றார்கள். சூழியல் கற்றுத்தரும் முறை என்ன?   வகுப்பறைக்கு வெளியே மாணவர்களை கூட்டிக்,கொண்டு போகாமல் சூழியலை கற்றுக்கொடுக்க முடியுமா, என்ன? சூழியல் ஒரு பாரம்பரிய வகுப்பறை பாடம் அல்ல...அது ஒரு நோக்கு.  ஒரு விழுமியம். ஒரு வாழ்வுநிலை. அதைக் குழந்தைப்பருவத்திலேயே உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.  சூழியலுக்கு நோபல் பரிசு பெற்ற கான்ராட் லாரன்ஸ் கூறினார் "இயற்கையை பராமரிக்க மனிதருக்கு கற்றுக் கொடுக்க ஒரே வழி அவர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே அதை சொல்லிக் கொடுப்பதுதான்." 


நகரத்தில் நடும் மரங்களுக்கும் மழைக்கும் தொடர்பு உண்டா?விளக்கி சொல்லுங்களேன்..,தொடர்ந்து ஒருபுற்ம் காடு அழிப்பும் மருபுற்ம் நகரங்களில் மரம் நடுவதும் சமன் ஆகுமா?




 மரம் நடுவதற்கும் மழைபொழிவிற்கும் பிணைப்பு ஏதும் இருப்பதாக அறிவியலாளர் கூறவில்லை. ஆனால் காலநிலை மாற்றம் பற்றி நாம் பேசும் போது, மரம் நடுவது முன்னரை விட பன்மடங்கு அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. கரியமல வாயுவை கிரகிப்பதில்  மரங்களின் பங்கு நமக்கு தெரியும்.  அது மட்டுமல்ல....ஒவ்வொரு மரமும் அணில், பறவைகள், பூச்சிகள் போன்ற சிற்றுயிர்களுக்கு ஒரு வாழிடம் (habitat).  ஆகவே மரங்கள் நட வேண்டும். மரம் நடும் போது நம் நாட்டு மரத்தை நாம் நட வேண்டும். வேம்பன், புங்கை, புளியமரம் போன்று.  இவைகளுக்கு  நீர் அதிகம் தேவையில்லை.இருக்கிற மரங்களை பொன்னென பாதுகாக்க வேண்டும்.


தமிழகம் வரும் அனைத்து அரசியல் தலைவரும் தவராமல் பேசும் விசயம் நதி நீர் இனைப்பு.சாத்தியமா இல்லையா?விளக்கி சொல்லுங்கள்.




  இணையக்கூடிய நதிகள் ஏற்கனவே இயற்கையால் இணைக்கப்பட்டுவிட்டன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். காவேரியுடன் அமராவதியும், பத்ரா நதியுடன் துங்காவும் இணைந்து விட்டன. நதிகளை இணைக்க முடியுமா? இது என்ன ப்ளம்மிங் வேலையா? வேறு எந்த நாட்டிலாவது செய்திருக்கின்றார்களா? இதன் சூழியல் தாக்கம் என்ன? அரசியல் அதிர்வுகள்?இயற்கைக்கு எதிர்வினையாக மனிதர் மேற்கொண்ட எந்த செயற்பாடுமே நல்ல விளைவைத் தந்ததில்லை என்பதற்கு நம் கண்முன் பல எடுத்துக்காட்டுகள் இருந்தும் நாம் ஒரு பாடமும் கற்றுக்கொள்ளவில்லை. அணுவைப்பிளந்தது, ஆறுகளில் நீரோட்டத்தைத் தடுத்து பேரணைகளைக் கட்டியது போல.  இருக்கின்ற நதிகளை நாம் பராமரித்தால் போதும். செயற்கை இழை ஆலைக்கழிவால் பவானி நதியும், 
தோல் பதனிடும் தொழிற்சாலைகளால் பாலாறும், சாயப்பட்டறைகளால் நொய்யலாறும், சாயக்கழிவால் அமராவதியும் வேதியல் ரீதியில் நாசமாக்கப்பட்டு விட்டன. இவைகளைத் தடுத்திருக்க முடியும்.

புலிகளுக்கு பாதுகாப்பு திட்டத்தில் உள்ள 38 பகுதிகளிலில் 12 மட்டுமே நல்ல நிலையில் உள்ளது என்று மத்திய அமைச்சர் ரமேஷ் அவர்களே ஒத்துக்கொண்டுள்ள நிலையில் இத்திட்டம் அவசியமா?


   Project Tiger அவசியம் என்றே நான் நினைக்கின்றேன். வேங்கை  பாதுகாக்கப்படுவதால் காடும், அதில் வாழும் அனைத்து காட்டுயிரும் பராமரிக்கப்படுகின்றன.  புலி நன்றாக இருந்தால் அந்தக் காட்டில் பன்றி, காட்டெருது, புள்ளிமான் போன்ற இரை விலங்குகள் நிறைய இருக்கின்றன என்று அர்த்தம்.  இந்தத் தாவரஉண்ணிகள் செழித்திருப்பது அவைகளின் வாழிடமான காடு வளமாக இருக்கின்றது என்று அர்த்தம். நமது நீர்வளத்திற்கு அடிப்படையஏ காடுகள் தானே. இவ்வுலகு நீரின்றி அமையதே.  எனவே தான் புலியை காப்பாற்ற வேண்டும். புலி ஒரு குறியீடு மட்டுமல்ல. பல்லூழிகால பரிணாமத்தின் உச்சம். நமது பாரம்பரிய செல்வம். கர்நாடக இசை, தாஜ் மகால்  போல.  வேங்கையை காட்டில் பார்த்திருக்கின்றீர்களா? பார்த்திருந்தால் இந்த கேள்வி வந்திருக்காது.

அற்றுப் போகும் த்ருவாயில் சிங்கம்.அழியும் நிலையில் புலி,அழிவின் தொடக்கத்தில் யானை என்று நம் வனசெல்வங்கள் தொட்ர்ந்து கொள்ளை பேவதின் அடிப்படை காரனம் என்ன சார்


 இதற்கு பல காரணங்கள் உண்டு. நான் முக்கியமாக கருதுவது வனத்துறை மாநில அரசின் கையில் இருப்பது தான்.  நமது சட்டசபை விவாதங்களை படித்துப்பாருங்கள்; காடு, காட்டுயிர் பற்றி எந்த அளவில் விவாதம் இருக்கின்றது என்று. காடு, சுற்றுச்சூழல் ஒரு வாழ்வாதரப் பிர்ச்னை என்று நாம் உணரவில்லை. சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகள் நமக்கு முக்கியமானதான தெரிவதில்லை.  சூழியலுக்கு முன்னுரிமை அளித்ததில் எந்த மாநிலம் இந்தியாவில் முதலிடம் பெற்றது தெரியுமா...சிக்கிம். 


சத்தியமங்கள்ம் வனபகுதி தொடரும் யானை மரணம்,பாதுகாக்கபட்ட வன பகுதிக்குள் பல ஆயிரம் மக்களை நுழையவிட்டது,அதிரடி படையினருடன் மோதல் ,கள்ளதனமான வேட்டை ,தொடரும் காரணம் புடியாத காட்டுத் தீ என்று பல பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கிறதே.இதற்க்கான மாற்று வழிகள் என்ன


. சத்யமங்கலம் காடு பல ஆண்டுகளாக பாதுகாப்பு பெற்றிருக்கும் காடு.  இன்று சரணாலய அந்தஸ்து கிடைத்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. அண்மையில் ஒரு ஆய்வாளர் மூன்று வேங்கைகளை, வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நாட்களில் கண்டது பதிவாகியிருக்கின்றது. இது நல்ல செய்தி. அது போல சிங்காராவை (குள்ளமான்) பார்த்தது படமும் எடுத்து விட்டார் ஒரு காட்டுயிர் ஆர்வலர். அவ்வவ்ப்போது  சாம்ராஜநகரிலிருந்து சத்யமங்கலத்திற்கு ரயில்பாதை என்ற அச்சுறுத்தல்தான் கவலையளிக்கின்றது. இந்த வனப்பகுதி பற்றி A.J.T.ஜான்சிங் அண்மையில் Frontline இல் எழுதிய கட்டுரையைப் படியுங்கள். 


சுற்றுலா இயற்கைக்கு வரமா?சாபமா?


  20ஆம் நூற்றாண்டு 'இசம்' களிலேயே சுற்றுச்சூழலுக்கு தீமை பயப்பது 'டூரிசம்' தான் என்றார் ஆகா கான்.உலகில் பல இயற்கை வளம் மிகுந்த இடங்கள் சுற்றுலாவால் சீரழிக்கப்பட்டத்தை சுட்டிக்காட்டலாம். சுற்றுலாப்பயணிகளுக்கு 1989இல் மணிலாவில் கூடிய பன்னாட்டு சுற்றுலா மாநாடு சுற்றுலாவிற்கும் சுற்றுச்சூழல் சிதைவிற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை Manilla Declaration என்ற அறிக்கையில் மூலம் சுட்டிக்காட்டியது.  ராந்தம்போர் சரணாலயத்தில்  நாள் ஒன்றுக்கு Rs, .25,000 க்கு வாடகைக்கு அறைகள் உள்ளன. அப்படியானால் காட்டில் எவ்வித பாதிப்பு இருக்கும் என்று பாருங்கள். டூர் ஆப்பரேட்டர்களுக்கு காட்டுயிர்மேல் என்ன அக்கறை? வால்பாறையைப் பாருங்கள் அமைதியாக அழகாக இருந்த இடம்.  சுற்றூலா என்ற பெயரில்,  கோடை விழாவிற்கு இரண்டு நாட்கள் இரண்டு லட்சம் பேர் கூடி அதை நாற அடித்து விட்டார்கள். இது வேறு வருடாவருடம் நடக்கும் என்கிறார்கள்.  அழகிய வால்பாறை காண விரும்புகிறவர்கள் இப்போதே போய் பார்த்துக்கொள்வது நல்லது. வால்பாறை ஒரு சரணாலயத்தின் நடுவே இருக்கிறது என்பதையும் விலை மதிப்பற்ற மழைக்காடுகளால் சூழப்பட்டது என்பதையும், போகும் வழியிலேலே வரையாடு, சோலைமந்தி (சிங்கவால் குரங்கு) போன்ற அரிய உயிரினங்களின் வாழிடங்கள் இருக்கின்றன என்பதையும், நாம் மனதில் கொள்ள வேண்டும்.


.


0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP