எழுத்தாளர் கிருஷ்ணாவுடன் நேர்காணல்

>> வெள்ளி, 20 ஜூலை, 2012


1,சுற்றுச்சூழல் குறித்து எழுதுவதற்கு எது உங்களை தூண்டியது?
பள்ளி பருவ காலங்களில் நான் வாழ்ந்த கிராமிய சூழல் சந்தித்த மக்கள், அவர்களிடம் கற்ற பாடம், இப்படி நிறைய கூறலாம். அறிவியல் ஆக்கிரமித்த இந்தச் சூழலில், படித்த பண்பானவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் எல்லாம், சுற்றுச் சூழலை நாசமாக்குவதும், மற்றொரு காரணம். 

2. சுற்றுச் சூழல் விழிப்புணர்வு தமிழ் சூழலில் எப்படி உள்ளது? குறிப்பிட்டு கூறும் படியாக ஒன்றும் இல்லை என்று ஒரேயடியாக கூறிவிட முடியாது. சில தமிழ் ஆங்கில பத்திரிக்கைகள், சில பக்கங்களை ஒதுக்கு கின்றன. ஞாயிறு இந்தியன் எக்ஸ்பிரஸில் சூழலிலயலாளர்களை எழுதச் செய்கிறார்கள். அவர்களும் நல்ல தரமான விழிப்புணர்வு ஊட்டும் கட்டுரைகளை எழுதுகிறார்கள். தினமணி ஞாயிறு கொண்டாட்டத்தில் நிறைய அறிமுக எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். உயிர்மையில் தியோடர் பாஸ்கரன் எழுதுகிறார். உயிரோசை இணைய இதழில் நான் எழுதுகிறேன். ஆனால் பள்ளிகளில் ஆதார அறிவே இல்லாமல், புத்தகங்களை மட்டுமே ஆதாரமாக வைத்து பாடம் நடத்துகிறார்கள்.குழந்தைகளுக்கு மதிப்பெண் எடுக்க மட்டுமே பயன்படுகிறது. கிராம மக்களிடம் இது தொடர்பான அறிவு நிறையவே உள்ளது.

3.பழங்குடி மக்கள் காடுகளிலிருந்து வெளியேற்றப்படுவதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? 
மிக அக்கிரமமான செயலாக கருதுகிறேன். பழங்குடிகள் நம்மை விட தீர்க்க திசனம் அதிகம் உள்ளவர்கள். இயற்கையோடு இயைந்து வாழ்பவர்கள்.இதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். இதைப்பற்றி நிறையவும் நாம் படித்திருக்கிறோம். வன மேளாண்மைக்கு அவர்களை துரத்தாமல், அவர்களின் துணையோடு நடவடிக்கை மேற்கொள்வது தான் புத்திசாலிதனமாக இருக்கும். 

4.வன உயிரின---மனித மோதலுக்கு என்ன காரணம்?
இதற்கான காரணத்தை பல இயற்கை ஆர்வலர்கள் தெளிவாக ஏற்கெனவே கூறிவிட்டார்கள். நகர்மயமாக்கலில், யானைத்தடம் மற்றும் பிற ஜீவராசிகளின் வாழ்விடத்திற்குள் புகுதல், மக்கள் தொகை அதிகமாக, தேவை அதிகரிக்க, அது உணவு இருப்பிடம், பொருளாதார தேவை என பல கோணங்களில், வன அழிவில் சென்று முடிகிறது. காடுகளை ஒட்டி வாழ்வோர், அதை ஆக்கிரமிப்பு செய்து வயல் வெளிகளை உருவாக்குகிறார்கள், புதிய தொழிற்சாலைகள் உருவாகின்றன, நீர் பற்றாக்குறை, இப்படி ஏராளமாக கூறலாம். 
5.வனத்தை காப்பதற்காக தமிழக அரசின் செயல்பாடுகள் என்ன நிலையில் உள்ளது?

பூஜ்ஜிய நிலையில் தான் உள்ளது. வனம் என்றில்லை, குளம் ,ஏரி, என சகலமும், நாசத்திற்கும், ஆக்கிரமிப்புக்கும் ஆளாகி வருகிறது. இதில், ஆளும் அரசு சார்ந்த அரசியல் வாதிகளின் பங்கு அதிகம். 

6.உங்களது முதல் புத்தகத்தை பற்றி கூறுங்கள்?
" இப்போது அவை இங்கு வருவதில்லை" என்ற தலைப்பில் எனது முதல் புத்தகம் உயிர்மை வெளியீடாக வந்துள்ளது. 55 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு இது. பேரினம், சிற்றினம், பொத என்ற தலைப்புகளில் , உயிர்மையின் இணைய இதழான உயிரோசையில் வாரா வாரம் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. எனது ஆசிரியரான மனுஷ்யபுத்திரன், முழு மனதோடு என்னை ஊக்குவித்து ஆதரவு அளிப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருகிறது. 


7. உங்களது புத்தகம், வெளிநாட்டில் பள்ளி குழந்தைகளால் விரும்பி படிக்கப் படுகிறதாமே?
பொதுவாக ,வெளிநாடுகளில், இயற்கையியல் மற்றும் சுற்றுச் சூழல் கல்வியை பால பாடமாக குழந்தைகளுக்கு புகட்டுகிறார்கள்.ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து பள்ளிகளில் எனது நூலை விரும்பி படிக்கிறார்கள்.உயிரோசை மூலமும் படிக்கிறார்கள். இது எனக்கும், மனுஷ்யபுத்திரன் போன்ற பதிப்பாசிரியருக்கும் கிடைத்த உரிய அங்கீகாரம்.

8.தமிழ்நாட்டின் மிக முக்கிய மூன்று பிரச்சினைகள் என்று எதை குறிப்பிடுகிறீர்கள்?
பிரச்சனைகளை எண்ணிக்கை வடிவிலெல்லாம் அளக்க முடியாது. தண்ணீர், விவசாய சீரழிவு, புதிய கலாச்சார ஊடுருவல் .....இப்படியே நீளும். தண்ணீர் பிரச்சினை உலகையே கபளீகரமாக்கி கொண்டுள்ளது. இது பிரச்சினை என்று நாம் அறிவோம். தீர்வை தான் நாம் அறிய விரும்பவில்லை. எந்த அரசும், இது வரை சரியான தீர்வு கண்டதாக தெரியவில்லை. போர்கால அடிப்படையில் அறிவு சார்ந்து, அரசியல் சாதியியல் ,மனமாச்சர்களை ஒழக்கி வைத்து விட்டு தீர்வு காண வேண்டும். இது காலத்தின் கட்டாயம். இன்றெல்லாம் யாரும் ,எனது தொழில் விவசாயம் என்று கூற ஏனோ வெட்கப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்கள்! இதற்கெல்லாம் காரணம் இயந்திரங்களின் ஆக்கிரமிப்பு, புதிய தொழில் துவக்கம், பழமையை புறக்கணித்தல் ,பணத்தின் மீதான மோகம் கடைசியாக ரியல் எஸ்டேட். கலாச்சாரம் சீரழிந்து விட்டது என கூக்குரல் இடாமல், அறிவியல் தொழில் நுட்பத்தின் தேவையான பயன்பாட்டையும், தேவையற்ற ஊடுருவலயும் தடுத்தாலே போதும். 

9. தேசிய நதி நீர் திட்டம் அவசியமா? சாத்தியமா?
அவசியம். ஆனால் சாத்தியமில்லை. பண்நெடுங்காலமாக அரசு பேசி வரும். அபத்த வரிகளாகத் தான் இன்றும் ஜீவித்து வருகிறது. இது குறித்து விரிவான ஒரு கட்டுரையையே உயிரோசையில் எழுதியிருக்கிறேன். இருப்பில் உள்ள நீர் நிலைகளை பாதுகாத்தால், ஆழ்துளை கிணறுகளை அதிகம் தோண்டாமல் இருத்தல், மழை நீர் அறுவடை ,வன அழிவு தடுப்பு இப்படி நம் பழமையான பழக்கத்தை மீட்டெடுத்தாலே தண்ணீர் பஞ்சம் வராது. 

10. புலிகள் பாதுகாப்பு திட்டம் சத்திய மங்கலத்திற்கு தேவையா?
சத்திய மங்கலம் என்றில்லை, புலிகள் எங்கெல்லாம் வாழ்கின்றனவோ ,அங்கெல்லாம் பாதுகாப்பு தரவேண்டியது அவசியம் தானே.புலிகளை மட்டும் கருத்தில் கொள்ளாது, அனைத்து பேருயிர், சிற்றுயிர் பாதுகாப்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். தகுந்த பிரச்சாரமும், ஒத்துழைப்பும் வளர்ச்சிக்கு கை கொடுக்கும். 

11.தற்போதைய புலிகளின் கணக்கெடுப்பு நம்பிக்கையா ,கண் துடைப்பா?
கண் துடைப்பு தான். காரணம், அரசியல் நெருக்கடியும், கடுமையான விமர்சனமும் தான். அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ஒரு புள்ளி விவரமான கணக்குகளையும், மறுபுறம், சுந்தர்பன் காடுகளை குறிப்பிடும் போது அங்கு வாழும் புலிகள் குறித்து உத்தேசமாக கணக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். புலிகளின் ஆர்வலர்கள், ஆய்வாளர்களின் கருத்தை இன்றைக்கும் அரசு புறக்கணித்தே வருகிறது. நவீன ஆய்வுக் கருவிகளை உபயோகிப்பதே இல்லை. பற்றாக்குறைக்கு புலிகளை கொலை புரிவோரிடம், வனத்துறையே நெருக்கம் காட்டுகிறது. பழிகளை மட்டும் அபாண்டமாக பழங்குடிகள் மீதும், மாவோயிஸ்டுகள் மீதும் போட்டுவிடுகிறார்கள். உண்மையில், இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் புலிகளின் எண்ணிக்கை கூடியுள்ளது .இதை அமைச்சரே ஒத்துக் கொண்டுள்ளார். இப்படியான சூழலில் அரசின் அறிக்கைகளை எப்படி உண்மை என நாம் எடுத்துக் கொள்ள முடியும். 

12.மத்திய அமைச்சர் ஜெய் ராம் ரமேஷ் செயல்பாடுகள்?
தனிப்பட்ட முறையில், நல்ல சீர்திருத்த எண்ணங்கள் இருந்தும், பிற அமைச்சகங்களின் தலையீடு ,மாநில அரசுகளின் ஒத்துழையாமை என பல காரணங்களால் முடங்கிப் போய் உள்ளார். 

13. உங்களின் அடுத்த புத்தகம்? 
சுற்றுச் சூழல் குறித்த அடுத்த தொகுப்பு ஒன்றை வெளியிட எண்ணியிருக்கிறேன். சில மொழி பெயர்ப்புகள், சமயம், கோயில், சிற்பக்கலை தொடர்பான படைப்பு ஒன்றையும் என் மனைவியின் பங்கீடோடு எழுதிக் கொண்டிருக்கிறேன். உயிர்மை ஆசிரியரின் முழு ஆதரவும், ஊக்கமும் உள்ளது. நன்றாக அமையும் என எதிர்பார்க்கிறேன். 

14.கரை பட்ட காவிரி கரை தேறுமா?
கரையேற்றுவது காலத்தின் கட்டாயம். இல்லையேல் பாலாறின் நிலைமை தான் வந்து சேரும். 


15. வளர்ப்பு பிராணிகள் ,குறிப்பாக குருவிகள் வளர்ப்பது சரியா?
பண்டைய வரலாற்றை திருப்பி பார்க்கும் போது ,வளர்ப்பு பிராணிகள் பட்டியலில் குருவிகள் மற்றும் சிறு ஜீவராசிகளின் பெயர்கள் நிறையவே உள்ளன. நம் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே திகழ்ந்து வருகின்றன. மேலை நாடுகளில், பள்ளிக் குழந்தைகள் விடுமுறை நாட்களில் ,மிருக காப்பகங்களுக்கு சென்று ஊழியர்களுடன் பணிகிறார்கள். இவ்விதமான ஏற்பாட்டை ,பள்ளிகளே பெற்றோரின் சம்மதத்துடன் செய்கின்றன. குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை தந்து , மனச் சுமையை குறைக்க ஏதுவாகின்றன. நம் இந்திய மருத்துவர்கள் கூட இவ்விதமான ஏற்பாட்டை இப்போதெல்லாம் பரிந்துரைக்கிறார்கள். நம் சூழலுக்கும் வசதிக்கும் ஏற்று யாருக்கும் ஊருவிளைவிக்காத வண்ணம் சிறு குருவிகளை வளர்ப்பதில் தவறொன்றுமில்லை என்பதே எனது கருத்து.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP