வரமா ...சாபமா?--- ஸ்டெர்லைட் ஆலை..ஒர் அலசல்

>> வியாழன், 20 ஜூன், 2013

 வரமா ...சாபமா?--- ஸ்டெர்லைட் ஆலை..ஒர் அலசல்

தூ
த்துகுடியில் இயங்கும் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் தாமிர தொழிற்சாலையை அதிரடியாக இழுத்து மூடி தமிழக அரசு சுற்றுச்சூழல் மாசுபாடுக்கு எதிரான சொல்லாடல்களை தேசமெங்கும் தீவிரபடுத்தியுள்ளது. மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் தடையை எதிர்த்து ஸ்டெர்லைட்  நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
மார்ச் 23 ம் தேதி அதிகாலை ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து சல்பர் டை ஆக்ஸைடு வாயு அளவுக்கு அதிகமாக வெளியேறியதால் தூத்துக்குடி மக்களுக்கு கண் எரிச்சல், தொண்டை அடைப்பு ,மூச்சு திணறல் ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. அப்புகார்களின் அடிப்படையில் மறுநாள் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் 3 நாட்களில் விளக்கம் கேட்டும் ,அப்படி தராதபடசத்தில் ஏன் தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்ககூடாது ? என்றும் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியது.அதற்கான இரண்டு விளக்கங்களை 27 மற்றும் 28 தேதிகளில் நிர்வாகம் வழங்கியது.




விளக்கத்தை ஏற்க மறுத்த மாசுகட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக தொழிற்சாலையை மூடவும் ,  மின்சாரத்தை நிறுத்த மின்வாரியத்திற்கும் உத்திரவிட்டது.இதனை எதிர்த்து  நிர்வாகம் தொடுத்த வழக்கு  பசுமை தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள் நீதிபதி. எம் .சொக்கலிங்கம் ,நாகேந்திரன் முன்னிலையில் விசாரனைக்கு வந்தது.போராட்ட குழு சார்பாக தேசிய சுற்றுப்புறச் சூழல் அறக்கட்டளையை சேர்ந்த பாத்திமா பாபு , மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பாக வழக்கறிஞர் அப்துல்சலீம் ஆகியோர் ஆஜரானார்கள்.
விவாதத்தில் நிர்வாகத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபலான் தூத்துக்குடி ஆட்சியர் வெளியிட்ட பத்திரிக்கை செய்தியை சுட்டி காட்டி தொழிற்சாலையில் இருந்து நச்சு வாயு வெளியேறவில்லை அது பொய்யான கூற்று எனவும்  சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள  ஸ்பிக் உள்பட பல ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ளாமல் ஸ்டெர்லைட் தொழிற்சாலை மீது உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டனர்.
விவாதங்களின் இறுதியில் இடைக்கால தீர்ப்பாக ஒரு தலைவர் ஒரு உறுப்பினர் உள்ளடங்கிய  நிபுனர் குழு அமைப்பது என்றும் அவர்கள் தொழிற்சாலையை ஆய்வு செய்து அறிக்கையை 29ம் தேதி தாக்கல செய்யவும் உத்திரவிடப்பட்டது.
ஆய்வு செய்ய  சென்னை ஐஐடி பேராசிரியர் பி.எஸ்.டி. சாய் தலைமையில்  ஐஐடி பேராசிரியர் லிஜி பிலிப் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கூடுதல் தலைமைப் பொறியாளர் ஆர். மோகன் நாயுடு, ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பிரிவு பொது மேலாளர் பி. சுமதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் விசவாயுக் கசிவு நிரூபிக்கப்பட்டால் நிரந்தரமாக மூடப்படும் என்று சென்னையில் பசுமைத் தீர்ப்பாய நீதிபதி சொக்கலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார். இது தமிழ்நாடு முழுவதும் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு எதிராக போராடும் குழுவினர்க்கு நம்பிக்கையை அளித்துள்ளது .(மிக முக்கிய போராட்டங்கள் குறித்து பெட்டி செய்தியில்)
தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து நீண்டகாலமாக களப்பணியாற்றி வரும் சுற்றுச்சூழல் ஆர்வளரமும் எழுத்தாளருமான ஜெய்ராமிடம் கேட்டபோதுஏற்கெனவே வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஸ்டெர்லைட் நிருவனம் மகிழ்ச்சியில் தான் உள்ளது. தீர்ப்பு வந்தவுடன் அதன் பங்குகள் சந்தையில் கனிசமாக விலை உயர்ந்து இருக்கிறது. 100 கோடி என்பது அவர்களுக்கு அபராதமே இல்லை.நிபுணர்களின் ஆய்வு முடிவுக்காக காத்திருக்கிறோம்என்று வருத்ததுடன் சுட்டி காட்டுகிறார்.
தமிழ் ஆழி கட்டுரைக்காக  ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டபோது தனிப்பட்ட பெயரை  முன்வைக்கவேண்டாம் என்ற கோரிக்கையோடு உயரதிகாரி ஒருவர் நிர்வாகத்தரப்பில் பேசினார். “எப்போது வேண்டுமானாலும் யார் விரும்பினாலும் தொழிற்சாலையை பார்வையிடலாம்.நச்சு வாயு எதுவும் வெளியேறவில்லை. காரணம் 21 மற்றும் 22 தேதிகளில் தொழிற்சாலை செயல்படவில்லை.23 ம் தேதி தான் செயல்படுத்த ஆரம்பித்தோம். அன்று காலையில் பொதுமக்களின் புகாரை அடுத்து காலை 9 மணியளவில் ஆர்.டி.ஓ தலைமையில்  ஆய்வு செய்தார்கள்.அந்த ஆய்வின் அடிப்படையில் 24ம் தேதி மாவட்ட ஆட்சியர் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை. மக்கள் பீதி அடைய தேவையில்லை என்று செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார்என்கிறார் நிர்வாகத்தின் சார்பாக.
இதனை மறுக்கும்  ஜெய்ராம் “ கடந்த அக்டோபர் 12 முதல் மார்ச்13 வரை ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இருந்து 83 முறை வாயு வெளிவந்துள்ளது .ஆனால் தற்போது வெளிவந்துள்ளது மக்களுக்கு ஆபத்தை விளைவித்திருக்கிறது.இது போல் மீண்டும் ஒரு முறை  பெரிய விபத்து நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் ? தொழிற்சாலை செயல்ப்டுத்த சோதனை ஓட்டம் 4-6 மணிநேரம் நடக்கும்..அந்த நேரத்தில் தான் விபத்தே நடந்திருக்கிறது என்கிறார்
தாமிர தொழிற்சாலைகள் மிகுந்த ஆபத்தானவை. 1200 செல்சியசில் தாமிரத் தாதுக்களை வெப்பத்திற்கு உள்ளாக்கும் போது அதில் உள்ள இரும்பு,ஆர்செனிக்,ஈயம்,கேட்ரியம்,குரோமியம் ஆகியவற்றிலிருந்து தாமிரத்தை பிரித்தெடுக்கிறார்கள்.அப்போது சல்பர் –டை-ஆக்ஸைடு வெளிப்படுகிறது.20000 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யும் போது 4 கிலோ சலபர் டை ஆக்ஸ்டைடு வெளியிடப்படுகிறது..இதில் வெளியிடும் நச்சு வாயுவால் மட்டும் ஆபத்து அல்ல. வெளியேற்றப்படும் ஸ்லாக் எனப்படும் கருப்பு மற்றும் வெள்ளை நிற ஜிபசம் கழிவுகள் மிகுந்த ஆபத்தானவை. இவை மக்களுக்கு நுரையிரல் பிரச்சனையை உருவாகும். கழிவுகளில் கலக்கும் மழைநீர் நஞ்சாகி  பல்வெறு நீர்நிலைகளிலும் கலக்கிறது. கழிவு நீரில் காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் உள்ள்ன .அந்த கழிவு நீர் சிள்ளான் கன்மாயில் கலந்த்தால் அந்நீரை குடித்த ஆடு,மாடுகள் இறந்து போனதை நினைவில் கொள்ளவேண்டும்.விவசாய பூமியில் இந்த நீர் கலப்பதால் நிலமும் நஞ்சாகிறது . இதனால் நிலம் நீர், காற்று என்று அனைத்தும் நஞ்சாகிறதுஎன்கிறார்  ஜெயராம்.
ஆலை நிர்வாகமோ ஜீரோ டிஸ்ஜார்ஜ் மூலம் நீரை நாங்கள் மறுசுழற்சி செய்கிறோம்.நீரை வெளியேற்றுவதில்லை என்கிறது. மழைநீரை எப்படி தடுக்கமுடியும்? கழிவுநீர் வெளியேற்றுவதை தடுக்கவே இயலாது என்கிறார் ஜெய்ராம்.
தொழிற்சாலை அமைக்கும் போது 250 மீட்டர் பசுமை தடுப்பு அமைக்க இருந்த சட்டம் 25 மீட்டர் ஆனது.  சில நாட்களுக்குள் மாறியது  புரியாத புதிர் அல்ல!அதையும் கூட  செய்யவில்லை.மன்னார் வளைகுடாவில் இருந்து 25 கி. மீ துரத்தில் தான்  இருக்கவேண்டும் என்ற விதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.லாபம் ஒன்றை மட்டுமே குறியாக செயல்படும் நேர்மையற்ற நிருவனம். இவர்களை எப்படி நம்புவது ?என்று கேள்வி எழுப்புகிறார் போராட்ட களத்தில் முன்னனியில் இருப்பவரும் தேசிய சுற்றுப்புறச் சூழல் அறக்கட்டளையை சேர்ந்த பேரா.பாத்திமா பாபு
இதனை மறுக்கும் நிருவனம்பசுமை தடுப்பு அமைத்துள்ளோம்.சுமார் 500 கோடி ரூபாய் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்காக செலவிட்டு இருக்கிறோம்.இதுதவிர  சாலை அமைத்தல் ,காப்பகஙகளுக்கு மற்றும் பள்ளிகளுக்கு உதவியும் வருகிறோம்.என்கின்றனர்.
நிருவனம் வியாபார வேலையை பார்க்கட்டும். சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் இயக்குவதே முக்கியமே தவிர காப்பகங்களுக்கு உதவுவது அல்லஎன்கிறார் ஜெய்ராம்.
இந்தியாவில் மூன்று நிருவனங்கள் தாமிர உருக்கு துறையில் இயங்கி வருகின்றன். ஸ்டெர்லைட் தவிர ஹிண்டல்கோ மற்றும் ஹிந்துஸ்தான் நிருவனங்கள். இந்தியாவின் தாமிர தேவை வருடத்திற்கு 5 லடசம் டன். ஸ்டெர்லைட் வருடத்திற்கு 4 லடசம் டன் தாமிரம் உற்பத்தி செய்து உள்நாட்டு தேவைக்கு 50 சதவீதம் பங்களிப்போதோடு மட்டுமன்றி  வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது.இதனை சார்ந்து சுமார் 1000 உபதயாரிப்பு ஆலைகள் உள்ளன. சரக்குபோக்குவரத்து ,நீர்வழி போகுவரத்து உடபட  500 க்கும் மேற்பட்ட தொழில்களின் வளர்ச்சிக்கு ஸ்டெர்லைட் காரணமாக இருக்கிறது..ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நம்பி 23,000 குடும்பங்கள் உள்ளது. ஸ்டெர்லைட்டின் சமுக ந்ல திட்டங்கள் மூலம் தூத்துக்குடி சுற்றியுள்ள சுமார் 1.5 லட்சம் பேரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியிருக்கிறது. தமிழகத்தின் ஜிடிபி வளர்ச்சியில் ஸ்டெர்லைட்டின் பங்கு 3.3 விழுக்காடு.வருடத்திற்கு சுமார் 1800 கோடி ரூபாய் வரியாக அரசுக்கு செலுத்துகிறது. துத்துக்குடி துறைமுகத்தின் வருவாயில் சுமார் 25 விழுக்காடு அளவிற்கு ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் கிடைக்கிறது.
இத்தகைய தகவல்களை சுட்டி காட்டும் நிர்வாகம் ‘ எங்களுக்கும் தேசத்தின் மீது அக்கறையுண்டு.நாட்டின் வளர்ச்சியில் பங்கு உண்டு.திடிரென்று தொழிற்சாலையை மூடினால் தாமிரத்திற்கு உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படும்.வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்யவேண்டும் அத்னால் விலை ஏற்றம் ஏற்படும்.மேலும் வளர்ச்சி திட்டங்களுக்கு அவை  தடைக்கல்லாக இருக்கும்.இது நாட்டுக்கு பொருளாதார சிக்கலை உருவாக்கும் “ என்கிறது.

இந்த விவகாரத்தில் சுற்றுப்புறச்சூழலாளர்களுக்கும் தொழிற்துறையாளர்களுக்கும் இடையில் வழக்கம் போல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.  இது போன்ற விஷயங்களில் மக்களின் நலனே பிரதானம் என்கிறார் தமிழ்நாடு  இன்வெஸ்டர்ஸ் அசோசியசன் தலைவரும் மணிவைஸ் கன்சல்டிங் இயக்குனுருமான ஷியாம் சுந்தர் 
மக்களின் பாதுகாப்பே முதன்மையானது. அதில் எந்த வித சமரசமும் இருக்ககூடாது.மக்களின் உயிர்க்கு அச்சத்தையோ கேடோ ஏற்படுத்தும் சுற்றுச்சூழலுக்கு எதிரான தொழிற்சாலைகளை முடவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்கிறார் அவர்.
“சமுகநலன் மட்டுமே முதனமையானது. தொழிற்சாலைகளை  நடுநிலையான நிபுணர் குழு அமைத்து  ஆய்வு செய்து அதன் முடிவுகளை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லை என்று தெரிந்த பிறகு ஒரு தொழிற்சாலையை மூடுவது என்பது ஜனநாயக நாட்டில் தனி மனிதனின் உரிமையை பறிக்கும் செயல்.தூத்துக்குடியை பொருத்தவரை சல்பர் டை ஆக்ஸைடு வெளியிடும் அனைத்து தொழிற்சாலைகளையும் ஆய்வு செய்து  சுற்றுச்சூழலுக்கு கேடு விளைப்பது தெரியவந்தால் அதனை மூடுவது தான் சரியான செயலாகும். அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பீடு என்பது அரசுக்கு அல்லது தனிமனிதருக்கோ என்றாலும் அது பொருட்டே அல்ல. மனிதர்களின்  வாழ்வு மீது நடத்தப்படும் எந்த வீபரீதமும் ஒரு நற்சமுகத்திற்கு இழுக்கே.என்கிறார் ஷ்யாம் சுந்தர்.  .
ஸ்டெர்லைட் நிர்வாகம் அடுக்கும் காரணங்களை  பேரா.பாத்திமா பாபு  கடுமையாக மறுக்கிறார். சில ஆயிரம் பேருக்கு பணியை கொடுத்துவிட்டு 6 லடசம் மனிதர்களின் வாழ்வை பறிக்கலாமா?நச்சு வாயு கசிந்த அன்று சுமார் 800 க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.ஆனால் ஆலை நிர்வாகம் தகவல் அறியும் சட்ட்த்தின் மூலம் ஒருவர் கூட சிகிச்சை பெறவில்லை என்று சான்றிதல் பெற்றிருக்கிறது. ஆனால் 24 ம் தேதி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் மக்கள் சிகிச்சை பெற்றார்கள் என்று சொல்லியுள்ளார். இடையில் என்ன நடந்தது ? என கேள்வி எழுப்புகிறார்.
ஸ்டெர்லைட் நிர்வாகமோ “. சுமார் 4000 பேர் பணியில் உள்ளனர்.மருத்துவ கண்காணிப்பிலும் உள்ளனர். இதுவரை எந்த உடல்சார்ந்த பிரச்சனையும் இல்லை என்கிறது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு மட்டும் 2508 பேர் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுள்ளனர் என்பதை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அரசிடம் இருந்தே பெற்றுள்ளார் நைனார் குலசேகரன் என்பதை சுட்டிகாட்டும் பேரா. பாத்திமா பாபு சமீபத்தில் மட்டும் ஜெயிலானி தெரு,தெற்குத்தெரு,மா.கா தெரு இந்த குறுகிய பகுதியில் மட்டும்8 பேர் இறந்துள்ளனர்.2 பேர் மோசமாக நிலையில் உள்ளனர் 27 பேர் சிகிச்சையில் உள்ளனர்என்கிறார். .
பச்சில் ஆல்வாய் ஓடையில் மழை காலங்களில் கழிவு நீரையும் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகள் திறந்து விடுகின்றன. இது நேரடியாக கடலில் கலப்பதால் கடலின் வளமே பாதிக்கப்படுகினறது.சிப்காட் பகுதியை சுற்றி உள்ள மக்கள் வாழ் பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபட்டு மஞ்சள் நிறத்தில் உள்ளதுஎன்கிறார் 94 ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிராக தூத்துக்குடியில் போராடி வரும் அமைப்புசாரா தொழிளாலர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பளர் கிருஷ்ணமூர்த்தி.
.மத்திய அரசின் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வின்படி சுற்று சூழலிலும், நிலத்தடி நீர் மாசுபாட்டிலும் இந்தியாவில் தொழில் நகரமான தூத்துக்குடி மிக மோசமான நகரம் என்றும், ஆபத்தான நகரம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாநகரிலும், சுற்றியுள்ள பகுதியிலும் குழந்தைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரித்து வருகின்றது. சுவாசக் கோளாறு, புற்று நோய், கண் எரிச்சல், நுரையீரல் சார்ந்த வியாதிகள், மலட்டுத் தன்மை மற்றும் சிறுநீரகம் சார்ந்த நோய்கள் தூத்துக்குடியில் அதிகரித்து வருகிறது என்கிறது தகவல்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெற்கு வீரபாண்டியபுரம் மற்றும் அதைச் சார்ந்த அ.குமாரரெட்டியார்புரம், காயலூரணி ஆகிய கிராமங்களில் நிலத்தடிநீர் விஷ நீராக மாறிவிட்டது என்று ஆய்வில் தெரிவித்துள்ளது.இதற்கு மிக முக்கிய காரணம் ஸ்டேர்லைட் ஆலை என்கிறார்கள் போராட்ட குழுவினர்.
தூத்துக்குடியை சுற்றி  நிலக்கரி மூலம் சுமார் 16.500மெக.வாட் மின்சாரத்திற்கான புதிய திட்டங்களாலும் வெளிப்படும் சல்பர் டை ஆக்ஸைடு கடுமையாக வெளிப்படுகிறது. மன்னார் வளைகுடாவில் இருக்கும் பாண்டியன் தீவு சாம்பல் கழிவுகளால் நிரம்பி உள்ளது.இத்தீவுகளை காக்க 140 கோடி ரூபாய் ஐக்கியநாடுகள் சபை தந்துள்ளது. துறைமுகத்தில் இருந்து 3 கி.மீ சாம்பால் கழிவுகளால் மூடப்படுள்ளது. இது தூத்துக்குடி நகரத்தை எங்கே கொண்டு போய் முடியுமோ?என்று வேதனைப்படுகிறார் கிருஷ்ணமுர்த்தி.
2011-12ம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனம் விற்பனையின் மூலம் ரூ 19,051 கோடி ஈட்டியிருக்கிறது. நிகர லாபம் ரூ 1,657 கோடி (விற்பனை மதிப்பில் 8.6%). இந்த லாபத்தில் 56.64% (ரூ 939 கோடி) டுவின் ஸ்டார் என்ற லண்டனைச் சேர்ந்த வேதாந்தா குழும நிறுவனத்துக்கும், 12.45% (ரூ 206 கோடி) சிட்டிபேங்க் நியூயார்க்குக்கும் போகிறது. ஒரு ஆண்டில் ரூ 939 கோடி ரூபாய் லாபம் பெறும் வேதாந்தா, ஸ்டெர்லைட் நிறுவனத்தில் செய்த பங்கு முதலீடு வெறும் 336 கோடி மட்டும். அதாவது 16 ஆண்டுகளில் தனது முதலீட்டுப் பணத்தை பல மடங்கு திருப்பி எடுத்த பிறகு சென்ற ஆண்டு முதலீட்டின் மீது சுமார் 300% லாபம் ஈட்டியிருக்கிறது. இந்த நிருவனத்தில் இருந்து இந்தியாவின் பல அரசியல் கட்சிகளும்  11 மில்லியனுக்கும் மேலான பணத்தை கட்சிக்கான நிதியாக பெற்றிருக்கின்றன என்பதையும் சுட்டி காட்டுகின்றனர் போராட்ட குழுவினர்.
இவர்கள் 5000 கோடி ரூபாய் செலவழித்தால் கூட இதுவரை  நடந்த சுற்றுச்சூழல் மாசுபாட்டை மாற்ற இயலாது .இழந்த மனித உயிர் இழப்புகளை மீட்க முடியுமா? 1994 முதல், 2004 க்கு இடைப்பட்ட காலங்களில் நடந்த விபத்துகளில், 139 தொழிலாளர்கள் படுகாயமுற்று உள்ளனர். 13 பேர் இறந்து உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் மர்மமாக இறந்துள்ளனர்.நச்சு வாயு வெளிவந்த அன்று பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் மேத்தா என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.அந்த ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் சேர்ந்து தான் போராடுகிறோம்.ஜனநெருக்கடி உள்ள நகரத்தில் இயங்கும் சுற்றுச்சூழலை கடுமையாக மாசுபடுத்தும் அபாயகரமான இந்த ஆலையை மூடுவது தான் இறுதி முடிவு.அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். பணபலம் மிகுந்த இந்த ஸ்டெர்லைட் ஆலையை எங்கள் உயிரை கொடுத்தாவது எதிர்கால சந்த்திக்காக இழுத்து மூடுவோம்என்கிறார் பாத்திமா பாபு.
இப்பிரச்சனை குறித்து தூத்துக்குடி மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் சுற்றுச்சூழல் பொறியாளர் கே. கோகுல்தாஸ் அவர்களை தமிழ் ஆழி தொடர்புகொண்ட்து. பிரச்சனை நீதீமன்றத்தில் இருப்பதால் அதுபற்றி கருத்து சொல்வது சரியாக இருக்காது என்றார்.
இறுதிகட்டத்தை அடைந்திருக்கும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தற்போது மருத்துவர்களின் குரலும் ஒலிக்க ஆரம்பித்து உள்ளதால் கோடையின் வெப்பத்தை விடவும் நகரம் கொதிநிலையை எட்டியுள்ளது. தொடக்க கட்டமாக 5 மருத்துவர்கள் தங்களின் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளனர்.ஆய்வின் முடிவுக்காக காத்திருக்கும் போராட்ட குழு அடுத்த கட்டமாக சுமார் 200க்கும் மேற்பட்ட அமைப்புகளிலும் இருந்து தலா இரண்டு உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து தமிழக முதலவர் ஜெயல்லிதாவை சந்திக்க தயாராகி வருகிறது .  காட்டுயிர் மேல் கரிசனம் காட்டும் முதலவர் மக்கள் மேல் காட்டுவாரா?
 


0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP