நீயா? நானா?-துளிரும் பசுமை அரசியல்!!

>> வியாழன், 20 ஜூன், 2013


நீயா? நானா?-துளிரும் பசுமை அரசியல்!!


நிலங்கள் என்பவை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி மாநிலங்களின் பட்டியலில் வருபவை .மத்திய அரசு எந்த வகையிலாவது அந்த நிலங்களை தனது அதிகாரத்தின் மூலம் பயன்படுத்த நினைத்தால் அது மாநில அரசுகளின் தன்னிச்சையான அதிகாரங்களின் மீது  செய்யப்படும் ஆக்கிரமிப்பு - ஜெயல்லிதா. 
 
த்திய அரசின் சார்பில் மேற்கு தொடர்ச்சி சூழலியல் ஆணையம் அமைக்க்கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜெயல்லிதா,பாரத பிரமருக்கு எழுதிய கடிதத்தில் ஆணையம் அமைப்பது மாநில அரசுகளின் அதிகாரங்களின் மீது தாக்குதல் நடத்துவது எனக் குற்றம்சாட்டியுள்ளார்!!

குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் ஆரம்பிக்கும் இந்த மலைத்தொடர் கோவா,கர்நாடக, கேரளா எனப் பரந்து தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் நிறைவடைகிறது.51 மாவட்டங்கள், 1600 கிமீ நீளம். 160000 ச.கிமீ பரப்பு. கிருஷ்ணா, கோதாவரி, பவானி, காவிரி, கபினி, வைகை, தாமிரபரணி என சுமார் 22 நதிகளுக்குத் தாய்மடி.300 மில்லியன் மக்களுக்கு குடிதண்ணீரை வழங்கும் அமுதசுரபி. 

5000க்கும் மேற்பட்ட தாவரங்கள்; 300 வகையான பாசிகள்; 800 வகையான மரப்பாசிகள்; 600 வகை பூஞ்சைகள் உள்ளன.1500 பூக்கும் தாவரங்களில் 38 சதவீதமும் மரங்களில் 63 சதவீதமும் இங்கு மட்டுமே உள்ளவை. விலங்குகளைப் பொறுத்தவரை, பாலூட்டி வகைகள் 120; நீர்நில வாழ்வன 121; 600 வகை பறவைகள்; ஊர்வனவற்றில் 157 வகை; மீன் இனங்களில் 218 வகை இங்கு வாழ்கின்றன. இதில் 53 சதவீத மீன் வகைகள் மேற்கு மலைத் தொடருக்கே உரியவையாக உள்ளன. இந்தியாவில் உள்ள 9 வகை மான்களில் நான்கு இங்குண்டு. இதில் மிகச்சிறிய கூரை மன்னி’, மிகப்பெரிய வரையாடு இங்குதான் உலவுகின்றன.தேசிய பூங்காங்கள்,புலி சரணாலயங்கள், வனவிலங்கு சரணலாயங்கள் என்று 40 மிக முக்கிய பகுதிகள் அடங்கியது...மேற்கு மலைத்தொடர்- ஒரு பூலோக சொர்க்கம்!!

மேற்கு மலைத்தொடர் நீண்டகாலமாகவே சுரங்கங்கள்,அணைகள் கட்டுதல், நகரமயமாக்கல், ஆறு வற்றுதல்,வேட்டை மற்றும் ஆக்கிரமித்தல் போன்ற மிகப்பெரிய அச்சுறுத்தலில் அழிந்து வருகிறது..இவை மக்களின் வளர்ச்சிக்கு என்ற பெயரில் மேலும் மேலும் மக்களைப் படுமோசமான நிலைமைக்கே இட்டுச்செல்கிறது. இம்மலையை நம்பியிருக்கும் மக்கள் மற்றும் வன உயிர்களின் வாழ்வாதராமே கேள்விக்குரியாய் தொங்கி நிற்கிறது

1987 இல் மேற்கு மலையைக் காப்போம் என்ற பெயரில் மேற்கு மலைத்தொடரையும் அதைப் சார்ந்து வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் நடைப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 160 அரசுசாரா தொண்டு நிறுவனங்களில் இருந்து சுமார் 1000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த நடைப்பயணம் கன்னியா குமரியில் தொடங்கி கோவாவில் முடிவுற்றது.இந்த நூற்றாண்டில் நடைபெற்ற மிகமுக்கியமான சுற்றுச்சூழலுக்கான நிகழ்வு.இதன்  மூலம் மேற்கு மலைத்தொடரைக் காப்போம் என்ற அமைப்பு உருவானது.

கோத்தகிரியில் 2010 பிப்ரவரி 18முதல் 20 வரை நடைபெற்ற மேற்கு மலைத் தொடரை காப்போம் குழுவினரின் மாநாட்டில் அப்போதைய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம ரமேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மேற்குமலைத் தொடரைக் காக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் தேவை என்பதை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தர ஒரு சிறப்பு குழுவை அறிவித்தார்.



மாதவ் காட்கில் தலைமையில் அமைக்கப்பட்ட சூழலியல் குழுவினர் 31 ஆகஸ்ட் 2011 இல் அரசுக்கு  அறிக்கையை சமர்பித்தனர். இவ்வறிக்கையை மத்திய அரசு மேற்குமலைத்தொடர் அமைந்துள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி கருத்து கேட்டது .அதனை தமிழ்நாடு தவிர ஏனை அனைத்து மாவட்டங்களும் உடனடியாகப் புறக்கணித்துவிட்டது. மத்திய அரசு உடனடியாக ஆய்வறிக்கையை மறுபரிசீலனை செய்ய மற்றுமொரு குழுவை அமைத்தது. நீண்ட காலமாகவே மவுனம் காத்த  தமிழக முதலவர் ஜெயலலிதா திடிரென்று அந்த அறிக்கையையில் மிக முக்கியமாகச் சொல்லப்பட்ட தேசிய ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.. ஒரு பக்கம் அரசியலாகவும் மறுபக்கம் சூழலியர்களிடையே பல்வேறு மாறுபட்ட கருத்துகளையும் இது ஏற்படுத்தியுள்ளது.

மத்திய மாநில பிரச்சனையாக உருவெடுப்பதை வருத்ததுடன் பார்க்கும் தியோடர் பாஸகரன் ..  இந்திய அரசியல்சட்டம் 1952இல் அமுலாக்கப்பட்டபோது, காடு மாநில அதிகாரத்திற்குட்பட்டது என்று அதில் இருந்தபோது காட்டுயிரியலாளர் மா.கிருஷ்ணன் அப்போதே இது மகாபெரியதவறு என்றார். அப்போது காட்டின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்திருக்கவில்லை. இப்போது, காலநிலைமாற்றம் எனும் பேராபத்து நம்மை சூழ்ந்திருக்கும்போது, அதன்சிறப்பு நமக்குத் தெரிகின்றது. நதிகள் எல்லாம் வரண்டுபோய் மறைந்துகொண்டிருக்கின்றன. இந்தஆபத்தை மட்டுப்படுத்த காட்டில் கைவைக்காமல் இருக்கவேண்டும். மலைகளும் காடுகளும் கனிமச்சுரங்கம், அணை, தோட்டப்பயிர், வெட்டுமரத்தொழில் போன்ற காரியங்களுக்காக அழிக்கப்படுகின்றன. நம் கண்முன்னேயே காடு சுருங்கிவருவதைக் காண்கின்றோம். உலகிலேயே உயிரினங்கள் அடர்ந்துள்ள 18 இடங்களில் மேற்குத்தொடர்ச்சிமலையும் ஒன்று. இதற்கு ஒரு ஆணையம் நிச்சயம் தேவை. மாநில அரசுகள் சுற்றுச்சூழலுக்கோ காட்டுயிர்பேணலுக்கோ முன்னுரிமை அளிப்பதில்லை. சட்டசபைகளில் என்றாவது இந்த விஷயத்தைப் பற்றி விவாதம் நடக்கிறதா பாருங்கள்என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகிறார்.

.தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மாநில இருங்கிணைப்பாளர் மோகனராஜ்  ஜெ.வின் நிலைப்பாட்டிற்கு வரவேற்பு தந்தாலும்  மாநில அளவில் சட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். , மேற்கு தொடர்ச்சி மலையில், காடுகளுக்கு வெளியே உள்ள நிலங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழ்நாடு அரசாங்கம் மலையிட பாதுகாப்பு ஆணையம் (HACA) அமைத்து மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பாதுகாத்து வருவதாகக் கூறியுள்ளது. ஆனால் மலையிடப் பாதுகாப்பு ஆணையம் (HACA) முறையாக செயல் பட்டிருந்தால் காடுகளுக்கு வெளியே உள்ள நிலங்களில் விதிமுறைகளை மீறிய (ஈசா, காருண்யா, சின்மயா போன்ற) கட்டிடங்கள், கேளிக்கை விடுதிகள், சாலைகள், மின் வேலிகள், உயரமான சுவர்கள், தடுப்பணைகள், சுரங்கங்கள், இரசாயன பூச்சிக்கொல்லிகள்,  இரசாயன உரங்கள், குப்பை கூடங்கள், கழிவுநீர் வடிகால்கள், aசுற்றுச்சூழலை பாதிக்கும் தொழிற்சாலைகள், போன்றவைகளால் பல்வேறு காட்டுயிர்களையும், யானைகள் வழித்தடத்தையும் பாதிக்கும் செயல்கள் நடந்திருக்காது.என்கிறார்.

“.மேற்குமலைத்தொடர் தேசிய ஆணையம் அமையும் போது மத்திய மாநில அரசுகள் யார் குற்றம் செய்தாலும் வெளிப்பட்டுவிடும். இது வனத்தை ராணுவத்தின் கையில் ஒப்படைப்பதற்கு சம்ம். அவ்வளவு எளிதில் அத்துமீறல்கள் இருக்காது “ என்கிறார் பெயரை பதிவு செய்யாவேண்டாம் என்ற கோரிக்கையோடு காணுயிர் ஆர்வலர் ஒருவர்..

ஓசை அமைப்பின் காளிதாஸ் “ஆணையம் அமைக்காவிட்டாலும் மாநில அரசு தற்போது வனத்திற்கு மட்டுமே சட்டங்களை வைத்துள்ளது. ஆனால் வனத்தை ஒட்டிய பகுதிகளில் வளர்ச்சி என்ற பெயரில் நிகழ்த்தப்படும் செயல்களினாலும் வனம் பெருமளவு பாதிக்கப்படுகிறது. ஆகவே அதையொட்டிய பகுதிகளுக்கும் சேர்த்து ஒருங்கிணைக்கப்பட்ட சட்டங்களை இயற்றவேண்டும்.அப்போதுதான் வனம் காப்பாற்றப்படும் “ என்கிறார்.

இதே நேரத்தில் முற்றிலும் ஆய்வறிக்கையை ஒதுக்காமல் அதன் சாதக பாதகங்களைக் கணக்கில் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தும் மோகன்ராஜ் . பூச்சிக்கொல்லிகள், உரங்கள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிர்கள் (Genetically modified organisms), ஒற்றை பயிர்கள் (mono culture plantation), நிலக்கரி மற்றும் கனிம சுரங்கங்கள், அணுமின் மற்றும்  அனல் மின் நிலையங்கள், நீர் மின்நிலையங்கள், பற்றிய நிபுணர் குழு பரிந்துரைகளை வரவேற்கலாம்.மேற்குத் தொடர்ச்சி மலைகள் சுற்றுச்சூழல் நிபுணர் குழுவில் உள்ளவர்கள் தமிழ்நாட்டில் உள்ள முதுமலையில் நுட்டிரினோ ஆய்வுக்கூடம் (Neutrino Observatory) அமைய உதவி புரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது கம்பம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் நுட்டிரினோ ஆய்வுக்கூடம் அமைய உள்ளது. இதைப்பற்றி ஒரே ஒரு வரிதான் அவர்களது அறிக்கையில் உள்ளதுஎன்று தனது ஆதங்கத்தையும் பதிவு செய்கிறார்.

அறிக்கையை முற்றிலும் வரவேற்கும் ,சூழலியல் துறையில்  அனுபவசாலியான தியோடர் பாஸ்கரன்  ஆணையத்தில் சுற்றுச்சூழலில் அக்கறைக்காட்டும் அரசியல்வாதிகளும் (அப்படிப்பட்டவர்களை அடையாளம் காணமுடிந்தால்) அறிவியலாளர்களும் இருக்கவேண்டும். இதன் அலுவலகம் தென்னிந்தியாவில் அமையவேண்டும்..ஆணையம் தன்னார்வக் குழுக்களுடன் இணைந்துசெயல்படவேண்டும். அதுமட்டுமல்ல காடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான ஆதிவாசிகளின் நலனை மனதில் கொண்டு அவர்கள் வாழ்வாதாரங்களுக்கு வளம் சேர்க்க, ஆணையத்திற்குத் தேவையான அதிகாரம் கொடுக்கப்படவேண்டும். வெறும் பிரசங்கத்துடன் நின்று, வர்மா கமிட்டிக்கு ஆனகதி இதற்கும் வந்துவிடக்கூடாதுஎன தனது ஆஅதங்கத்தையும் பதிவு செய்கிறார்.

இயற்கை வளங்கள் மத்திய மாநில அரசுக்கானதல்ல.. அது உலகம் முழுமைக்கும் சொந்தமானது என முன்மொழியும் மருத்துவர் ஜீவானந்தம். “வனம் மாநிலங்களுக்கு சொந்தமானது.மாநிலங்கள் தேசத்தின் அங்கம்.மாநிலத்தின் உரிமைகளை தேசிய அரசு பறிக்கக்கூடாது.அதே சமயம் மாநிலத்தின் கடமைகளை வலியுறுத்தகூடிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. சுயநலமிக்க கட்சிகள் மாநில ஆட்சிக்கு வரும்போது இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதை அண்டைய மாநிலமான கர்நாடகத்தில் கண்கூடாகக் கண்டோம்!! இயற்கை வளங்களைக் கண்கானிக்கவும் கட்டுப்படுத்தவும்  மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பது மக்களுக்கு நல்லது. கடந்த 65 ஆண்டுகளில் வெள்ளையர்களால் மிச்சம் வைக்கப்பட்ட 25 % இயற்கை வளம் தற்போது 12.5 % ஆகக் குறைந்துபோனது!! இதுவரை மாநிலத்தின் கைகளில் மட்டுமே வனம் உள்ளதை நினைவில் வையுங்கள். உரிமையைக் கேட்கும் அதேநேரத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் வளத்தைப் பாதுகாக்கும் கடமையையும் தமிழக அரசு மறந்துவிடக்கூடாது!!மேற்கு மலைத்தொடர் மத்திய மாநில அரசுகளின் சொத்து அல்ல. இந்தியாவின் சொத்தும் அல்ல.. அது உலக மக்களின் சொத்து.அதனால் தான் ஜப்பான் ஏற்கெனவே இந்த வளங்களைப் பாதுகாக்க 450 கோடி ரூபாய் மான்யமாகத் தந்துள்ளது. மேலும் பல நூறு கோடிகளைக் கொடுக்கத் தயாராக உள்ளது. திட்டங்களை உருவாக்கி அதைப் பொதுவில் அறிவித்து மத்திய மாநில அரசுகள் செயலாக்கும் முறையை மக்கள் தான் கண்காணிக்க வேண்டும்!!.என்கிறார்.

முத்தாய்ப்பாக இந்தக் கட்டுரையை மருத்துவர் ஜீவானந்தம் அவர்களின் சொற்களில் முடிப்பதே இயற்கைக்கு செய்யும் கைமாறாக இருக்கும்.  இதில் உரிமையா ...கடமையா என்றால் மத்திய மாநில அரசுகள்  கடமையைச் செய்யட்டும் .. காரணம் வனவளம் ஒட்டுமொத்த மக்கள் இனத்தின் உரிமை!!

நன்றி:தமிழ் ஆழி.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

  © Page Design By MugaMoodi 2012

Back to TOP